நாட்டில் பல்வேறு விதமான மோசடி சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முகநூலில் பிரபலமானவர்கள் பெயரில் போலி கணக்கு உருவாக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடி செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் போன்றவர்களின் புகைப்படத்தை எடுத்து போலி கணக்கை தொடங்கி அவர்களது நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு நட்பு அழைப்பு விடுக்கப்படுகிறது. அந்த கணக்கு உண்மையானது என நினைத்து நட்பு அழைப்பை ஏற்றால் சிறிது நேரத்தில் அவசர தேவைகளுக்காக பணம் தேவைப்படுகிறது என மெசேஜ் அனுப்பப்படுகிறது.

ஒரே சமயத்தில் பலருக்கும் இது போல் மெசேஜ் அனுப்பப்படுகிறது. சிலர் நேரடியாக கேட்க தயக்கப்பட்டு இப்படி கேட்கின்றனர் என நினைத்து அவர்களும் பணத்தை அனுப்பும் சம்பவங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு அவரது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் இணையும்படி அழைப்பு விடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களிடம் பண உதவி கோரப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் எம்.எல்.ஏ நந்தகுமாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் நந்தகுமார் எம்.எல்.ஏ என்னும் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வரும் தகவலை கண்டு யாரும் ஏமாற வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் எம்.எல்.ஏ நந்தகுமார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.