இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. தற்போது சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்கள் இணைய பயன்பாட்டாளர்கள் இடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் மூலமாக ஹாக்கர்கள் மோசடி செய்வதாக அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தற்போது வேகமாக மோசடி செய்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டீப்பேக் போன்ற செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மரபான பாதுகாப்பு யுக்திகளை தகர்த்து சாதாரண பொதுமக்கள் மத்தியில் பணம் பறிப்பு போன்ற பல மோசடிகளில் ஈடுபடும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் குரலை உற்பத்தி செய்வது அல்லது வீடியோக்களை மாற்றி அமைப்பது போன்ற சம்பவங்கள் மோசடிக்காரர்களுக்கு ஒரு வாய்ப்பாக உருவாகி பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இது தவறானவர்கள் கைகளுக்கு சென்றால் விளைவுகள் மிக மோசமாகத்தான் இருக்கும். சமீபத்தில் கூட செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் அவரது நண்பரை போன்ற போலியான குரலில் பேசிய ஒருவரை நம்பி 40 ஆயிரம் ரூபாய் தொகையை இழந்துள்ளார். எனவே இது போன்ற மோசடிகளில் சிக்காமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.