தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 15 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதால் மத்திய சாலை போக்குவரத்து துறை நெடுஞ்சாலை துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி தமிழக அரசின் உள்துறை அண்மையில் ஒரு அரசாணையை வெளியிட்டது. அதன்படி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து வழக்கு பதிவு வகையில் ஏ என் பி ஆர் கேமராக்கள்,ஸ்பீடு கேமராக்கள் மற்றும் சீருடை அணியும் கேமராக்கள் உள்ளிட்ட நவீன கேமராக்களை மாநில சாலைகளில் பொருத்த வேண்டும்.

போக்குவரத்து விதிமுறை அமலாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் டேஷ் போர்டில் கேமரா பொறுத்து இருக்க வேண்டும். அதிவேகமாக செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல், சிக்னல்களை மீறி செல்லுதல் மற்றும் தடை செய்யப்பட்ட வாகனத்தை நிறுத்துதல் உள்ளிட்ட விதிமுறை மீறலில் ஈடுபடுவோர் கேமராக்கள் மூலம் பதிவு செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்படி வழக்குகளை பதிவு செய்யும்போது வாகனத்தின் பதிவு எண் மற்றும் வாகன ஓட்டியின் ஓட்டுனர் உரிமம் தெளிவாக மின்னணு ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு 15 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.