பாகிஸ்தான் தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வழங்குமாறு அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் முதல் கட்டமாக 9,800 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. மீதி தொகையை அடுத்து வரும் ஒன்பது மாதங்களில் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிஃப் கூறுகையில், “சர்வதேச நாணய நிதியம் செய்த இந்த உதவி பொருளாதாரத்தை பலப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளில் முக்கிய படியாகும். இதன் மூலம் பொருளாதார சிக்கல்களை உடனடியாக சமாளிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.