கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் புனியம்கோட்டை பகுதியை சேர்ந்த பா.ஜ.க. உள்ளூர் நிர்வாகி ராதாகிருஷ்ணன் (வயது 49) துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சரக்கு ஆட்டோ டிரைவரான இவர், சம்பவ நாளில்  இரவு தன்னுடைய நண்பர் சந்தோஷ் அழைப்பின் பேரில் மாதமங்கலத்தில் கட்டி வரப்படும் ஒரு புதிய வீட்டிற்கு சென்றிருந்தார். இருவரும் அங்கு பேசிக் கொண்டிருந்த வேளையில் திடீரென தகராறு ஏற்பட்டு, சந்தோஷ் தன்னிடம் இருந்த எடுத்து துப்பாக்கியால் ராதாகிருஷ்ணனை நோக்கி சுட்டார். இதில்  மார்பில் துப்பாக்கி  குண்டு பாய்ந்து ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே,உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு அருகிலுள்ள பொதுமக்கள் ஓடி வந்தபோது, ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததும், சந்தோஷ் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்ததும் தெரியவந்தது. பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தவர்கள் மதுபோதையில் சந்தோஷை  கைது செய்தனர். குடிபோதையால் ஏற்பட்ட தகராறின் விளைவாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தோஷ் வைத்திருந்த துப்பாக்கி, காட்டு பன்றிகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் வகையானது எனவும், அவர் அதற்கான உரிமம் பெற்றவர் எனவும் போலீசார் தெரிவித்தனர். அவர் பா.ஜ.க.வில் இருப்பதால், முதலில் இது அரசியல் பழிவாங்கல் கொலை என சந்தேகம் எழுந்தது. எனினும், தற்போது நடத்திய விசாரணையில், கொலையில் அரசியல் தொடர்பில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது சந்தோஷிடம் மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நண்பரையே துப்பாக்கியால் சுடும் அளவுக்கு என்ன காரணம் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.