இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின்படி பிரசவத்தின் போது ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் ஒன்பது மாத காலம் வழங்கப்பட்டு வந்த இந்த விடுமுறை தாய்மார்களின் உடல் நிலையை கருதி ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில் மன்றம் அனைத்து ஊழியர்களுக்கும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் ஒரே மாதிரியான மகப்பேறு விடுமுறையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் பிரசவத்தின் போது தவறுதலாக குழந்தை இறந்து விட்டால் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரசவமானதிலிருந்தே 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டுமே இந்த சிறப்பு விடுப்பு பெற தகுதி உண்டு எனவும் அரசு தெரிவித்துள்ளது.