ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் போட்டியில், அனுபவம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி நிலைகுலையச் செய்த சம்பவம் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குவஹாட்டியில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே தீபக் சாஹர் பந்துவீச்சைச் சிதறடித்து 22 ரன்களைக் குவித்தார்.
இருப்பினும், ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் ஜஸ்பிரித் பும்ரா வீசிய அடுத்த ஓவரின் மீதே இருந்தது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான பும்ரா வீசிய முதல் பந்திலேயே அசாத்தியமான ஒரு சிக்ஸரை விளாசி வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி வேட்டையைத் தொடங்கினார்.
பும்ராவைத் தொடர்ந்து டிரென்ட் போல்ட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பந்துவீச்சிலும் முதல் பந்திலேயே சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வைபவ் மிரட்டினார். வெறும் 14 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 5 மெகா சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 39 ரன்களை விளாசினார்.
15 YEARS OLD SURYAVANSHI SMASHING BOULT, BUMRAH, THAKUR 😍🔥 pic.twitter.com/JnuumJahYd
— Johns. (@CricCrazyJohns) April 7, 2026
“>
278.57 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய இவரது ஆட்டத்தால், மும்பை அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். துருவ் ஜூரலைத் தவிர மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும், வைபவ் ஏற்படுத்திய இந்த அதிரடித் தொடக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்தது.
15 வயதிலேயே ஜாம்பவான்களின் பந்துவீச்சைச் சாதாரணமாக எதிர்கொண்ட வைபவ்வின் துணிச்சலை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
