புதுச்சேரியில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மார்ச் 2ம் தேதி காணாமல் போன சிறுமி வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்று கை, கால்களை கட்டி மூட்டையாக வாய்க்காலில் வீசிய வழக்கில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர், பொதுமக்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுசேரியில் கொல்லப்பட்ட 5 வயது சிறுமியின் பெற்றோர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்த நிலையில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நமச்சிவாயம் அளித்த பேட்டியில், போதைப் பொருள் தடுப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேலும் தீவிரபடுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் தொடர்ந்து எடுக்கும். எனவே அத்தகைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.

எப்போதுமே வந்து இது போன்ற குற்றச்செயல்கள் நடக்கும் பொழுது காவல்துறை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அது போல சந்தம் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட அதிகாரி மீது ஏதாவது தவறு இருந்தால் உரிய விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். ஒரு சிலர் அரசு உள்நோக்கத்துடன் சொல்கிறார்கள்.  கஞ்சா கடத்திய  நிறைய பேரை கைது செய்துள்ளோம். மற்ற மாநிலத்தில் இருக்கிற அந்த குற்றவாளிகள் கூட அந்த மாநிலத்தில் இருந்து கைது செய்துள்ளோம். கஞ்சா பழக்கங்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இருந்தாலும் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் இருந்து நம்ம மாநிலத்தில் பரவக்கூடிய சூழல் இருந்து வருகிறது.

தொடர்ந்து கண்காணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு வருகிறோம். கஞ்சா, போதை புழக்கம் அதிகமாக இருக்கிறது என யாரும் சொல்கிறார்கள் என்றால் அரசியல் உள்நோக்கத்திற்காக களங்கம் கற்பிப்பதற்காக சொல்கிறார்கள். அதுபோல எதுவும் இல்லை. எனவே காவல்துறை தலைவரின் கீழ்  ஆலோசனை செய்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்..