இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணை தொகைகள் வழங்கப்பட்ட நிலையில் 13-வது தவணை தொகையான ரூ. 16,000 கோடியை கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி பகுதியில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிலையில் 13-வது தவணை தொகையின் கீழ் விவசாயிகளுக்கு பணம் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது உங்கள் வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்றால் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குள் சென்று உங்கள் பெயரை சரி பார்க்க வேண்டும். அதற்கு பார்மர்ஸ் கார்னர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பயனாளிகளின் பட்டியலில் உள்ள உங்கள் பெயரை சரி பார்த்துக் கொள்ளலாம்.

அதன்பிறகு e-KYC மற்றும் நில விவரங்கள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும், ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதில் அனைத்து விவரங்களும் சரியாக இருந்தும் பணம் வரவில்லை என்றால் விவசாய அமைச்சகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் புகார் கொடுப்பதற்காக டோல் ஃப்ரீ நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் ஹெல்ப்லைன் நம்பர் 0120-6025109, பிஎம் கிசான் நியூ ஹெல்ப்லைன் நம்பர் 011-24300606, லேண்ட்லைன் நம்பர்கள் 011-23381092, 23382401, ஹெல்ப்லைன் நம்பர் 155261, டோல் ஃப்ரீ நம்பர் 18001155266 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.