தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8.25 லட்சம் பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தம் 280 மையங்களில் இன்று தொடங்க உள்ளது. இந்தப் பணியில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் 24 விடைத்தாள்களை திருத்த அரசு உத்தரவிட்டுள்ளது. விடை மதிப்பீட்டு பணிகளை ஏப்ரல் 21ஆம் தேதி முடிப்பதற்கு அரசு தேர்வு துறை திட்டமிட்டுள்ளது. விடை திருத்தம் செய்ய பாடவாரியான விடை குறிப்புகள் அரசு தேர்வு துறைகளில் இருந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே கணித தேர்வில் ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி தவறாக இருந்ததால் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் ஐந்து மதிப்பெண் முழுமையாக வழங்கலாம் என அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. ஒரு மதிப்பெண் வினாக்களை தவிர மற்ற பிரிவில் மாணவர்கள் சொந்த நடையில் பதில் எழுதி இருந்தால் முழு மதிப்பெண் வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் டூ தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் செய்வதற்கான விடை குறிப்புகள் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டன.