திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் மடல். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் முடித்து திரும்பிய நிலையில் அங்கு மக்களிடமிருந்து பெற்ற உளப்பூர்வமான, உற்சாக மகிழ்ச்சியுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். என்னுடைய எழுபதாவது பிறந்த நாள் என்பது அதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்பதை தவிர வேறு வகையான ஆடம்பரங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை.

அதாவது பிறந்தநாள் விழா என்னும் பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை இப்போதல்ல இளைஞரணி செயலாளராக இருந்தபோது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எளிமையான முறையில் கழகத்தின் இரு வண்ணக் கொடியை ஏற்றி ஐம்பெரும் கொள்கை முழக்கமிட்டும், ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி  வழங்கியும் பயன் தரும் விதமாக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். அதே போல் கலகத்தினர் எது செய்தாலும் துரும்பை துணாக்கி  விமர்சனங்களுக்கு காத்திருக்கும் எதிர் தரப்பினருக்கு கொஞ்சமும் இடம் தராமல் எளிய முறையில் நிகழ்வுகளை நடத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இயக்ககத்திற்கும் இன்ப தமிழ்நாட்டிற்கும் தொண்டினை தொடர்ந்திடுவேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் உங்களில் ஒருவனான என்னுடைய 70 -வது பிறந்த நாளில் கழக உடன்பிறப்புகளான உங்கள் ஒவ்வொருவரின் அன்பான வாழ்த்துக்களையும் மனமுவந்து ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் திராவிட கருத்தியலின் அடிப்படை நோக்கங்களான சமூகநீதி – சுயமரியாதை – சமத்துவம் – மாநில உரிமை இவற்றை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய ஒன்றிய அளவில் நிலைநாட்டிடும் ஜனநாயக அர்ப்பணிப்பில் நாம் அனைவரும் இணைந்து நின்று தொடர்ந்து உழைத்திட வேண்டும் என விரும்புகிறேன். நம்முடன் கொள்கை தோழமைக் கொண்டுள்ள இயக்கங்களுக்கு ஒருங்கிணைந்து செயல்படுவோம். தமிழ்நாட்டை முதன்மை மாநிலம் ஆக்கும் இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்றும் என்பதே உங்களில் ஒருவனான உங்களின் முதன்மை தொண்டனான  என்னுடைய பிறந்தநாள் செய்தி. அதற்கு ஏற்ப அயராது உழைத்திட ஆயத்தமாக இருக்கிறேன். என்னுடைய லட்சிய உணர்வு கொண்ட உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு சிறந்த வாழ்த்துக்களாக கருதுகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.