ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், வாக்களிக்க சென்ற ஒரு பெண் மை வைக்காமலேயே வாக்களித்து விட்டு வெளியே வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லு பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் ஹேமாவதி என்ற பெண் வாக்களிக்க வந்திருந்தார்.

ஆனால் மை வைக்காமலேயே ஹேமாவதி வாக்களித்து விட்டு வெளியே வந்த நிலையில், தானே அதை கண்டுபிடித்து தேர்தல் பணியாளரிடம் கூறி வீரலில் மை வைத்தார். வாக்களிப்பதற்கு முன்னதாகவே மை வைக்கப்படவேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தும், எப்படி இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்.