ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களை பாஜக கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. அந்த மாநிலத்தில் 24 வருடங்களாக நவீன் பட்நாயக் தலைமையில் ஆன பிஜூ ஜனதா தளம் ஆட்சி செய்த நிலையில் தற்போது அந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது பாஜக கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் கந்தர்கர் மாவட்டத்திற்கு உறுப்பினர் சேர்க்கைக்காக அந்த மாநில பாஜக துணை தலைவர் வைஜயன்த் ஜெய பாண்டா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் 100 ரூபாய் பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை தான் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததாக கூறி அவரிடம் கொடுக்குமாறு கூறினார். அந்த பெண்ணிடம் அவர் பிரதமருக்கு வெறும் நன்றி மட்டும் சொன்னால் போதும். பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறினார்.

இருப்பினும் அந்தப் பெண் என்னுடைய மனதிருப்திக்காக பணத்தை பிரதமரிடம் கொடுங்கள் என்று கூறினார். அதாவது பழங்குடி மக்களின் சமுதாய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான் பணத்தை அனுப்பியதாகவும் அந்த பெண் நெகிழ்ச்சியாக கூறினார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய x பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் பிரதமர் மோடியும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து பிரதமர் மோடி கூறும் போது எப்போதும் என்னை ஆசிர்வதிக்கும் எங்களுடைய நாரி சக்திக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் ஆசீர்வாதங்கள் தான் என்னை நாட்டுக்காக உழைக்க தூண்டுகிறது என்று கூறியுள்ளார்.