மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. செல்லூர் கே. ராஜூ, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் எழுச்சி மிகுந்த வரவேற்பு கிடைப்பதாகக் கூறினார்.
அவர் சென்ற இடங்களில் மக்கள், “ஆட்சிக்கு வந்ததும் இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள்” என உற்சாகமாக கேட்கின்றனர் என்றும், இதுபோன்று மக்கள் எழுச்சி கடந்த காலங்களில் மெஜஸ்டிக் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா சுற்றுப்பயணங்களிலேயே காணப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
அதேபோல் இன்று எடப்பாடிக்கும் அதே அளவிலான கூட்டம் திரளும் என்பதை பார்த்தால், அடுத்து ஆட்சி அமைப்பது அ.தி.மு.க.தான் என்பது உறுதி எனக் கூறினார்.
இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக கூட்டணியிலிருந்து விலகி, மு.க. ஸ்டாலினை மூன்று முறை சந்தித்துள்ளார் என்பதை நினைவூட்டிய செய்தியாளர்கள், “அவரை பார்த்தால் பாவமா இல்லையா?” என்று கேட்டனர்.
இதற்கு ஆவேசமாக பதிலளித்த செல்லூர் ராஜூ, “ஒரு தலைவரைப் பற்றி பாவமா இல்லையா? என்பது போன்ற வார்த்தைகள் தவறானவை. அவர் யாரையாவது மூன்று முறை சந்தித்தாரா, நான்கு முறை சந்தித்தாரா பேச வேண்டியதில்லை. அது இப்போது பேச வேண்டிய விஷயம் இல்லை” எனக் காட்டமாக பதிலளித்தார்.
