டெல்லியில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்  தலைமை மாற்றப்பட வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தனர். அதன்பிறகு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பயிற்சியாளர்கள் பெண்களை மிகவும் துன்புறுத்துகிறார்கள் என்றும் சிலர் தவறான முறையில் அணுகுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அதோடு அமைப்பின் தலைவர் பாலியல் ரீதியாக பல பெண்களை துன்புறுத்தியுள்ளார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் மற்றும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மறுப்பு தெரிவித்ததோடு விசாரணைக்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மல்யுத்த கூட்டமைப்பு 72 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு போராட்டம் குறித்தும், குற்றச்சாட்டுகள் குறித்தும் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.