நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியும் மொத்தமாக தட்டி தூக்கி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக இந்த தேர்தல் தொடங்குவதற்கு முன்பு தனித்தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டன. தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் அதிக அளவில் வெற்றி கிடைத்திருக்கும் என பேச்சு எழுந்துள்ளது.

இந்த நிலையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகவும் எதிராகவும் அதிமுகவிற்குள் இரு வேறு கருத்துக்கள் நிலவி வருவதாக வெளியான தகவல் உண்மை தானோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என எஸ் பி வேலுமணி கூறி இருந்தார். இந்த நிலையில் அதற்கு நேர் எதிராக பாஜக கூட்டணியில் இருந்ததால்தான் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவிற்கு கிடைக்கவில்லை என்று செம்மலை கூறியுள்ளார்.