பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், நோஷ்கி நகரைச் சேர்ந்த 25 வயதான காஷிஷ் சவுத்ரி, அந்நாட்டு அரசு நிர்வாகத்தில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் இந்துப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் பலுசிஸ்தான் சாகாய் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பொது சேவை ஆணையம் (BPSC) நடத்தும் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று இந்த பதவியை அடைந்துள்ளார்.

தனது வெற்றிக்கு மூன்று வருட கடின உழைப்புதான் காரணம் எனக் கூறும் சவுத்ரி, தினமும் எட்டுமணிநேரம் தொடர்ந்து படித்து வந்ததாகத் தெரிவிக்கிறார். “சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே என்னைத் தொடர்ந்து முயற்சி செய்ய வைத்தது,” என உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.

அவரது தந்தை, ஒரு உள்ளூர் வியாபாரியாக இருக்கும் இவர், “என் மகளின் கனவுகள் எப்போதும் உயர்ந்தவையாக இருந்தன. இன்று அவை நனவாகியிருக்கின்றன. பெண்களுக்கும் சமூகத்திற்கும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் இதை முயன்றார்,” என பெருமிதத்துடன் கூறுகிறார்.

 

திங்களன்று, காஷிஷ் மற்றும் அவரது தந்தை, பலுசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்தியை சந்தித்தனர். அவரை நேரில் பாராட்டிய முதல்வர், “நாட்டிற்கும் மாகாணத்திற்கும் பெருமையின் சின்னம்” என புகழ்ந்தார். பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் அதிகாரமளிப்புக்காகவும், மாகாண வளர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்ற உறுதிமொழியை சவுத்ரி நிகழ்த்தியுள்ளார்.

இந்த சாதனையின் மூலம் காஷிஷ் சவுத்ரி, பாகிஸ்தானில் சமூக கட்டுப்பாடுகளை முறியடித்த இந்துப் பெண்களின் வரிசையில் இணைந்துள்ளார். 2022-ல் கராச்சியில் காவல் கண்காணிப்பாளராக மனேஷ் ரோபெட்டா, 2019-ல் துணை ஆய்வாளராக புஷ்ப குமாரி கோஹ்லி, சிவில் நீதிபதியாக சுமன் பவன் போதானி ஆகியோர் முன்னோடிகளாக இருந்தனர்.

காஷிஷ் சவுத்ரியின் இந்த சாதனை, பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் அதிகாரமளிப்பில் புதிய சகாப்தத்தை தொடங்குகிறது. அவர் காட்டிய துணிவு மற்றும் உறுதி, வரும் தலைமுறைக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.