இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், பொறியியல், வர்த்தகம், அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த வருடம் நாட்டின் உயரிய பத்ம விருதுகள் 106 பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தேர்வாகியுள்ளனர். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்பிறகு தமிழகத்தைச் சேர்ந்த வாணி ஜெயராமுக்கு கலை பிரிவில் பத்மபூஷன் விருதும், சமூக பணிப்பிரிவில் பாலம் கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதும், மருத்துவ பிரிவில் டாக்டர் கோபால்சாமி வேலுசாமிக்கு பத்மஸ்ரீ விருதும், கலை பிரிவில் கல்யாணம் சுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட இருக்கிறது.

இதேபோன்று மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷன் விருதும், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த மறைந்த தலைவர் முலாயம் சிங்குக்கு பத்ம விபூஷன் விருதும், கலைத்துறையில் ஜாகிர் ஹுசேனுக்கு பத்ம விபூஷன் விருதும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் கே.எம் பில்லாவுக்கு பத்மபூஷன் விருதும், சமூக பணிக்காக சுதா மூர்த்திக்கு பத்மபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு இசை அமைத்த கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடம் 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், 9 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.