சிங்கபெருமாள் கோவில் ஸ்ரீவாரி நகரத்தைச் சேர்ந்த பானுமதி (31) மற்றும் குழந்தை தெரசா (27) ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நெருங்கிய தோழியான ஸ்டெல்லாவுக்கும் ஈரோட்டை சேர்ந்த ஜெகதீஸ் (47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி ஸ்ரீவாரி நகரில் உள்ள வீட்டில் தங்கி வந்தனர்.

தீபாவளிக்காக, துணி வாங்கித் தருவதாகக் கூறி ஜெகதீஸ் மற்றும் ஸ்டெல்லா, பானுமதி மற்றும் குழந்தை தெரசாவை வேளச்சேரிக்கு அழைத்து  சென்றனர். மாலில், துணி தேர்வு செய்து கொண்டிருந்த குழந்தை தெரசாவின் மொபைல் போனை வாங்கிச் சென்றனர். பின்பு, பானுமதியை அருகிலிருந்த மேக்கப் சலூனுக்கு அழைத்துச் சென்று, நகை அணிய வேண்டாம் எனக் கூறி, அவர் அணிந்திருந்த 4 சவரன் நகையை கைப்பற்றினர்.

துணி தேர்வு முடிந்து வெளியே வந்தபோது, ஸ்டெல்லா மற்றும் ஜெகதீஸ் மாயமாகி விட்டனர். மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்து, நகை மற்றும் போனுடன் இருவரும் தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து, பானுமதி மற்றும் குழந்தை தெரசா வேளச்சேரி போலீசில் புகார் அளித்தனர். வேளச்சேரி போலீசார், ஈரோட்டில் ஜெகதீசை கைது செய்து, நகையை மீட்டனர். ஸ்டெல்லா குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.