
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம். இவரை அந்நாட்டு ரசிகர்களும், ஊடகங்களும் “கிங்” என்றுதான் அடைமொழியோடு அழைப்பார்கள். ஏனெனில் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன நாளிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல ஏராளமான சாதனைகளையும் படைத்தார். அதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு அவருடைய செயல்பாடுகள் பெரும் விமர்சனங்களை சந்தித்தது . இதன் காரணமாக கடந்த ஒரு நாள் மட்டும் டி20 உலக கோப்பைகளில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியது.
இதன் காரணமாக தற்போது கேப்டன் பதவியிலிருந்து விலகி சாதாரண வீரராக விளையாடி வருகிறார். இந்த நிலையில் தன்னை யாரும் கிங் என்று அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “என்னை யாரும் கிங் என்று அழைக்க வேண்டாம். அப்படி கூறுவதை நிறுத்துங்கள்.
நான் அந்த பட்டத்திற்கான இடத்திற்கு இன்னும் வரவில்லை. கடந்த காலத்தை மறந்து விட்டு எதிர்காலத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கு அணியில் புதிய ரோல் இருக்கிறது. அதனால் என்னுடைய ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தி பயணிக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.