
ராஜஸ்தானில் உள்ள பரோடாவைச் சேர்ந்த 26 வயது கிரிக்கெட் வீரர் சிவாலிக் சர்மா மீது திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கழட்டிவிட்டதாக பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டின் பேரில் ராஜஸ்தான் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த புகார் ஜோத்பூரில் உள்ள குடி பகத்ஸானி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளளனர்
சிவாலிக் சர்மா மற்றும் அந்த பெண் முதன்முதலில் 2023ம் ஆண்டு பிப்ரவரியில் பரோடாவில் நடைபெற்ற பயணத்தின் போது சந்தித்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் நெருக்கம் அதிகமான நிலையில் பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இரு குடும்பங்களும் சந்தித்து, 2023ம் ஆண்டு ஆகஸ்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
நிச்சயதார்த்தத்திற்கு பிறகு, ஜோத்பூருக்குத் திரும்பிய சர்மா, அந்த பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும், இருவரும் ராஜஸ்தானில் பல இடங்களுக்கு பயணம் செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அந்த பெண் பரோடாவிற்கு சென்றபோது, சர்மாவின் பெற்றோர், அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதாலும் வேறு திருமண வரன்கள் வருகிறது என்றும் கூறியும் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அந்த பெண் போலீசில் முறையீடு செய்தார். போலீசார் மருத்துவ பரிசோதனை, நீதிமன்ற அறிக்கை உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முடித்துள்ளனர். அந்த நேரத்தில் தலைமறைவாக இருந்த சர்மா, போலீசாரால் பிடிபட்டு கைது செய்யப்பட்டார்
சிவாலிக் சர்மா 2018ம் ஆண்டு முதல் தன்னுடைய முதல்தர போட்டி வாழ்க்கையை தொடங்கியுள்ளார். 18 போட்டிகளில் 1,087 ரன்கள் எடுத்துள்ள அவர், சராசரி 43.48 வைத்துள்ளார். லிஸ்ட் A போட்டிகளில் 322 ரன்கள் (13 ஆட்டங்களில்), T20 போட்டிகளில் 349 ரன்கள் (19 ஆட்டங்களில்) எடுத்துள்ளார். 2025ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ரண்ஜி டிராபியில் பரோடா அணிக்காக கடைசி முறையாக ஆடியுள்ளார்.
அவர் ஹார்திக் பாண்ட்யா, கிருநால் பாண்ட்யா உள்ளிட்ட பிரபல வீரர்களுடன் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.