தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மற்றும் பிரபல நடிகர் விஜய்க்கு மத்திய அரசு நேற்று ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்தது. அதன்படி CPRF வீரர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய  போலீசார் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு மாறி மாறி பாதுகாப்பு கொடுப்பார்கள். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று விஜய்க்கு திடீரென பாதுகாப்பு வழங்கும் என்று அறிவித்த நிலையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் அது பேசும் பொருளாக மாறியது. அதாவது நடிகர் விஜயை சந்தோஷப்படுத்தி தங்கள் பக்கம் இழுப்பதற்காகவே பாஜக பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளதாக கே பி முனுசாமி உள்ளிட்டோர் கூட விமர்சித்தனர். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு ஒய்  பிரிவு வழங்கியதற்கான காரணத்தை தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, நடிகர் விஜய்க்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று வந்த தகவலின் படி தான் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு கூட பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட இதே போன்று பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நடிகர் விஜய்க்கு தமிழக அரசு ஏன் இதுவரை பாதுகாப்பு வழங்கவில்லை. பொதுவாழ்வில் இருப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கும் என்று கூறினார். மேலும் நடிகர் விஜய்க்கு ஆளுநர் மாளிகைக்கு செல்ல முடியாத சூழல் மற்றும் பரந்தூர் சென்று பொது மக்களை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அவர் செல்லும் இடங்களில் பொதுவாக கூட்டம் என்பது கூடும். இது போன்ற காரணங்களால் தான் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக கூறினார்.