கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டடங்களை கட்டிய பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் அனுமதி இன்றி விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டிய பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நடிகர்கள் பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பி இருக்கிறது.

மேலும் வழக்கு குறித்து விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்தார். கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பங்களாக்களை கட்டி வருகின்றனர். இது எந்த வித அனுமதியும் பெறாமல் விதிமுறை பின்பற்றாமல் கட்டி வருகின்றனர். எனவே உரிய அனுமதி இல்லாமல் விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கில் தான் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நடிகர் பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரின் கட்டிட கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இருவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கில் கட்டுமான பணிகளை நிறுத்திய நிலையில் இருவர் மீதும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  வரும் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வில்பட்டி கிராமத்தில் இந்த பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கிராம பஞ்சாயத்து சட்டங்களின் அடிப்படையில் நாங்கள் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கில் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? ஏற்கனவே என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பது குறித்த விவரங்களை முழுவதுமாக நிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்..