
காமெடி கிளாடிகலு சீசன் 3 மூலம் குடும்பங்களில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ராகேஷ் பூஜாரி (33), மே 11ஆம் தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். நண்பரின் திருமணத்துக்கு முன்னதாக நடைபெற்ற மெஹந்தி விழாவில் கலந்து கொண்டிருந்த அவர், உடல் சோர்வுடன் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். உடுப்பி மாவட்டம் மியாயார் பகுதியில் நடந்த விழாவில், ராகேஷ் நடனமாடிக்கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்ததாகவும், அவர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகும் ‘காந்தாரா: Chapter 1’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
View this post on Instagram
நடிகர் சிவ்ராஜ் கே.ஆர். பீட், இன்ஸ்டாகிராமில் தனது நண்பரின் புகைப்படத்துடன், “பலரின் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்திய உயிருக்கு ஓய்வெடுக்கச் சொல்ல எப்படி முடியும்?” என்ற உருக்கமான பதிவு மூலம் அவரின் மரணத்தை உறுதி செய்தார்.
View this post on Instagram
மரணத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன், ராகேஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் மஞ்சள்-வெள்ளை பிரிண்டட் ஷர்ட், டெனிம் பேன்ட் மற்றும் கறுப்பு தொப்பி அணிந்து, திருமண விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திடீரென ஒரு பிரபல நடிகரின் மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.