
இந்தியா முழுவதும் கடந்த 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது புத்தாடைகள் அணிந்து இனிப்புகள் சாப்பிட்டு பட்டாசுகள் வெடித்து பலரும் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடினர். ஆனால் நம்முடைய இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் மட்டும் சாபத்திற்கு பயந்து பல நூற்றாண்டுகளாக தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லையாம். அதாவது இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தில் சம்மூ என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தான் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாட்டார்கள். அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக அந்த கிராமத்தில் ஒரு திருமணமான பெண் ஒருவர் வாழ்ந்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்தார்.
அவர் தீபாவளியை கொண்டாடுவதற்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் அப்போது மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில் அங்கு சிப்பாயாக பணிபுரிந்த அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இதைக் கேட்ட அந்தப் பெண் மிகவும் பேரதிர்ச்சி அடைந்த நிலையில் தன்னுடைய கணவரின் இறுதி ஊர்வலத்தின் போது திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இனி தீபாவளி பண்டிகையை கொண்டாடக்கூடாது என்று அவர் சாபம் விட்டதாக கூறப்படுகிறது. இதை மீறி தீபாவளி பண்டிகையை கொண்டாடினால் அவர்களுக்கு துரதிஷ்டம் மற்றும் பேரழிவு வரும் என்றும் அதை மீறி கொண்டாடினால் மரணம் கூட நேரிடலாம் என்றும் இளைய தலைமுறையினரை பெரியவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு வேறு கிராமத்திற்கு சென்றதால் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதாகவும் அப்போது வீட்டில் இனிப்பு பலகாரங்கள் செய்த போது வீடு தீப்பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் வேறு ஊர்களுக்கு சென்றாலும் அவர்களை பெண்ணின் சாபம் தொடர்வதாக கூறுகிறார்கள். இந்த தகவலை அந்த கிராமத்திற்கு திருமணம் ஆகி வந்த பஞ்சாயத்து நிர்வாகியான பூஜா தேவி என்பவர் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக இன்று வரையில் அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் இருக்கிறார்கள்.