ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உட்பட பலர் நடித்து தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவந்து 1200 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்த படம் நேரடியாக களமிறங்கி இருக்கிறது. இதற்கிடையில் முன்னதாக அமெரிக்க நாட்டில் வழங்கப்படும் “கோல்டன் குளோப்” விருதுகளுக்காக ஆர்ஆர்ஆர் திரைப்படம் 2 பிரிவுகளில் நாமினேட் ஆகியது.

ஆங்கிலம் இல்லாத மொழிகளில் சிறந்த படத்துக்கான நாமினேஷன் மற்றும் ஒரிஜினல் பாடலுக்கான (நாட்டு.. நாட்டு) நாமினேஷனிலும் கலந்துகொண்டது. இந்த நிலையில் நாட்டு..நாட்டு பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்குரிய கோல்டன் குளோப் விருதினை வென்று இருக்கிறது. அதன்பின் படக்குழுவினரும், தெலுங்குத் திரையுலகத்தினரும், மற்ற மொழி சினிமா பிரபலங்களும் மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு ஆந்திரா முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரி ஜெகன்மோகன் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தெலுங்கு கொடி உயரப் பறக்கிறது. ஒட்டு மொத்த ஆந்திரபிரதேசம் மாநிலம் சார்பில் எம்.எம். கீரவாணி, ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.