கர்நாடக மாநிலம் மைசூரில் குமாரசாமி (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா (39) என்ற மனைவியும், அர்ச்சனா (19) மற்றும் சுவாதி (17) என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை அவர்களுடைய வீட்டிற்கு அர்ச்சனா மற்றும் சுவாதியின் தோழி ஒருவர் வந்துள்ளார். இந்த இளம்பெண் வீட்டின் கதவைத் தட்டினார்.

ஆனால் அவர்கள் நீண்ட நேரமாக கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அந்த பெண் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் குமாரசாமி, மஞ்சுளா மற்றும் அவருடைய இருமகள்கள் ஆகிய 4 பேரும் பிணமாக கிடந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 பேரும் இறந்தது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.