தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை முன்னிட்டு நடை மேம்பாலம், மேம்பாலம், சாலை விரிவாக்கம் புதிய போக்குவரத்து வசதி என தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தியாகராய நகரில் கட்டமைக்கப்படும் ஆகாய நடை மேம்பாலம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பழம் ரயில் நிலையம் வரை செல்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இதற்காக 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 600 மீட்டர் நீளமும் 4.20 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் மழை வெயில் போன்றவற்றினால் மக்கள் பாதிக்கப்படாத விதமாக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயன்பெறும் விதமாக லிப்ட் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒப்பனை அறைகள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பயணத்தை எளிமைப்படுத்தும் விதமாக பேட்டரி வாகனங்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் நடை மேம்பாலத்தை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை போடுவதை தடுக்கும் விதமாக ரோந்து பணிகளில் போலீசார் ஷிப்ட் அடிப்படையில் பணியில் அமர்த்த ஆலோசனை செய்து வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு இதற்கான மேம்பால பணிகள் தொடங்கப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று, ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை, ஊழியர்கள் பற்றாக்குறை, மேம்பால திட்ட வடிவமைப்புகளில் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது 90 சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழா எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வருகிற ஏப்ரல் மாத இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடிவடையும் அதன் பின் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறியுள்ளனர்.