தில்லியில் மதுபான கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3 மாதங்களுக்கு முன் இது தொடர்பாக குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில்,  மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டுமாக சம்மன் அனுப்பியது.

இதனிடையே தில்லி அரசின் பட்ஜெட் குறித்த வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் மதுபான கொள்கை மாற்ற மோசடி வழக்கில் சிபிஐக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என துணை மணீஷ் சிசோடியா தெரிவித்தார். இந்நிலையில், மதுபானக்கொள்கை வழக்கில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) இன்று விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வெளியில் ஆம் ஆத்மி தலைவர்களின் போராட்டம் நடத்த உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.