தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகத் தமிழக காங்கிரஸ் எடுத்த அதிரடி நிலைப்பாடு, இந்திய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோருடன் கார்கே தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினார். தவெக-விற்கு ஆதரவு அளிப்பதில் உள்ள அரசியல் லாப நஷ்டங்கள் மற்றும் தற்போதைய நிலைப்பாடு குறித்து இந்த உரையாடலில் விரிவாகப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
காங்கிரஸின் இந்தத் திடீர் ஆதரவு முடிவால் கூட்டணிக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தனித்தனியே அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகின்றனர். இந்தச் சூழலில் கார்கே முன்னெடுத்துள்ள இந்தத் தூது முயற்சி, கூட்டணியைத் தக்கவைக்கவா அல்லது தவெக-விற்கான ஆதரவை உறுதிப்படுத்தவா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லித் தலைமையின் இந்த நேரடித் தலையீடு, தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
