கருங்கல்பாளையம் அருகே துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் திமுக தேர்தல் பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு கருங்கல்பாளையம்  கே.என்.கே நகர் பகுதியில் பொதுமக்களை சட்டவிரோதமாக திமுகவினர் அடைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியானது. அந்த இடத்தில் பொதுமக்கள் காலை 8 மணியிலிருந்து மாலை வரை அங்கு அமர்ந்திருக்க வேண்டும். அவர்களுக்கு தினசரி 500 ரூபாய் பணம், இருவேளை சாப்பாடு, அதேபோல குடிப்பதற்கு டீ போன்றவை வேளா வேலைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர்.  இதேபோல பல்வேறு இடங்களில் அமர்ந்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து அங்கு இருக்கக்கூடிய வாக்காளர்கள் அங்கு நடக்கக்கூடிய விவரங்களை தெரிவித்து இருந்தனர். தினசரி வந்து கொண்டிருக்கிறோம். கடந்த 10 நாட்களாக வருகிறோம். தினசரி 500 ரூபாய் பணம், சாப்பாடு  கொடுப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் தேர்தல் பணிமனையில் பணம்கொடுத்து வாக்காளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

இந்த சூழலில் தான் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் திமுக தேர்தல் பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேர்தல் பணிமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வாக்காளர்களை அதிகாரிகள் வெளியேற்றினர். மேலும் வாக்காளர்களை வெளியேற்றிவிட்டு தேர்தல் பணிமனையை பூட்டிச் சென்றனர் அதிகாரிகள்..