தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் பால்கொண்டா பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கதம் லட்சுமணன் என்ற 10 வயதுச் சிறுமி, நாய் கடித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, நாய் கடித்ததில் சிறுமிக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.

ஆனால், பெற்றோரிடம் சொன்னால் திட்டுவார்கள் என்ற பயத்தில், ரேபிஸ் போன்ற கொடிய நோய் பற்றி அறியாத அச்சத்தால், இந்தச் சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் சிறுமி மறைத்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், சிறுமி சரியான நேரத்தில் சிகிச்சை பெறாமல் தனது உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டது.

சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, லட்சுமணாவின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவர் நாய் போலக் குரைப்பது போன்ற அசாதாரண நடத்தையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார். இதைக் கண்டு பதறிய குடும்பத்தினர், உடனடியாகச் சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், சிகிச்சை அளிக்கத் தாமதமானதால், அவருக்கு ரேபிஸ் நோய் முழுமையாகத் தொற்றிவிட்டது மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவர்கள் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாய் கடித்தால், அது தெரு நாயாக இருந்தாலும் சரி, செல்லப்பிராணியாக இருந்தாலும் சரி, சின்னக் காயம் ஏற்பட்டாலும் தாமதிக்காமல் ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் நாய் கடித்ததை மறைக்கும் அபாயம் இருப்பதால், பெற்றோர் இது குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, ரேபிஸ் அபாயம் குறித்துக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.