தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதார நிலையங்களிலும் போதுமான எரிபொருள் விநியோகத்துடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். டார்ச் லைட் மற்றும் மொபைல் சார்ஜ் செய்ய பேட்டரி உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் வாகனங்களை மேடான பகுதியில் நிறுத்த வேண்டும். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளை அனுமதிக்க படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குடிநீர் மற்றும் பிற பயன்பாட்டுக்கான நீர் மாசுபடுவதை தவிர்க்கவும் தரமான நீரை உறுதி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.