தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் சித்திரை முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நேற்று வேலூரில் அதிகபட்சமாக 42.3 டிகிரி வெயில் பதிவானது. சென்னையில் 40.8 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனை தொடர்ந்து இன்னும் மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக தான் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியே வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அவசியமான பணிகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். மெல்லிய மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். சிறிய குழந்தைகள்,கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.