
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை அண்ணாநகர் துணை ஆணையர் சிநேக பிரியா, ஆவடி துணை ஆணையர் ஜமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வந்தது. இந்தக் குழு பரிந்துரையின் பெயரில்தான் ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் எஃப் ஐஆர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக வந்து விசாரணை செய்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினரும் ஒருபுறம் துரித விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி தற்போது விலகியுள்ளார். அதாவது குழுவில் உள்ள அதிகாரிகள் தன்னுடைய பணியை சரிவர செய்யவிடாமல் தடுப்பதால் குழுவில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவருடைய இந்த அறிவிப்பு காவல் நிலைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.