தமிழகத்தில் 10,11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு ஜனவரி மாதம் முதல் பொதுத் தேர்வுக்கு முன்னதாக மூன்று திருப்புதல் தேர்வுகள் முழு பாடத்திட்டங்களுக்கும் நடத்தப்படும். திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவதன் மூலமாக மாணவர்கள் தேர்வு குறித்த அச்சம் நீங்கி மிகவும் தன்னம்பிக்கையோடு தேர்வு எதிர்கொள்வார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி முடிப்பதற்கான பயிற்சியும் கிடைக்கும்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மாவட்டத்தின் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12 மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு அட்டவணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் முறைப்படி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அட்டவணையின் படி ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வு பிற்பகல் 1:30 மணி முதல் 4. 45 மணி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.