தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் இதுவரை 4000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இதனை தொடர்ந்து தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் தனியாக காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் காய்ச்சல் பரவல் மற்றும் கொசு உற்பத்தி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களையும் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். இதன் மூலமாக மக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பரிசோதனை மையங்களில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.