தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முறையாக நடைபெறாததால் பல சிக்கல்கள் இருந்ததால் இதனை தடுக்க அரசு இந்த உத்தரவை வெளியிட்டது. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்கள், மின் சாதனங்கள் மற்றும் மின்வாரியத்தில் உள்ள இயந்திரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று கண்காணிக்கப்படும். இதனை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெறும் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்றதால் தேர்வு முடிவடையும் வரை மாணவர்களின் நலனுக்காக மின்தடை செய்யப்படாது என அரசு அறிவித்தது. இந்நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் வழக்கம் போல மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்ட பகுதிகளில் இனி மின்தடைகள் இருக்கும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.