தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆயுதம் தொடர்பான விஷயங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகளால் இன்று தமிழகம் முழுவதும் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை மற்றும் தென்காசியில் உள்ள ஏற்கனவே பதியப்பட்டுள்ள ஆயுத வழக்கை அடிப்படையாக வைத்து சந்தேகப்படும் படியான நபர்களின் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், இந்த விரிவான சோதனையில் ஒரு மடிக்கணினி, 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள், 4 பென் ட்ரைவ் என மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், பயங்கரவாத அமைப்பு மற்றும் கொலை செய்யப்பட்ட பிரபாகரன் ஆவணங்கள், புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய் முகமே அதிகாரிகளால் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு வெளியாகி உள்ளது.

அதேபோல கடந்த 2022 ஆம் ஆண்டில் மே 19ஆம் தேதி சேலம் புளியம்பட்டி பிரிவில் வாகன சாதனையின் போது நவீன சக்கரவர்த்தி மற்றும் சஞ்சய் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக  காவல்துறை முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் துப்பாக்கி போன்ற விவரங்கள் உள்ளடக்கியிருந்தாக இந்த விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என விசாரணையில் தெள்ளத்தெளிவாக தெரியவந்தது. தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிகரான அமைப்பை நிறுவி தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தை நடத்த விரும்பினர் என தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் ஒரு குற்றவாளியான கபிலர் என்று அழைக்கக்கூடிய கபிலன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேசியப் புலனாய்வு முகாமை அதிகாரிகளால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், இந்த வழக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி தேசியப் புலனாய்வு முகமையால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்று காலை நடத்தப்பட்ட 6 இடங்களில் நடந்த சோதனை முடிவில் இதுபோன்ற தகவல்கள் முழுமையாக என்.ஐ.ஏ அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணையானது தொடர்ந்து நடைபெறும் எனவும், ஆயுதப் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் கபிலன் என்ற நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.