1989இல் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் நான் வெற்றி பெற்றேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..

மதுரை வலையங்குளம் பகுதியில்  நடைபெறும்  அதிமுக மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரையில்,  தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அதிமுக தான். நான் முதலமைச்சராக வந்த போது பல்வேறு விமர்சனங்களை அப்போதையே எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் முன் வைத்தார். அதிமுகவை அழிக்க கருணாநிதி கனவு கண்டார், அது நிறைவேறவில்லை. தொடங்கி 6 மாதத்திலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே கட்சி அதிமுக தான்.

1989இல் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். கஜா புயலின் போது புயலை விட வேகமாக செயல்பட்டு பாதிப்புகளை சீரமைத்தோம்.31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுக தான். அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும், எந்த நபராலும் முடியாது. புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண தொகையை அள்ளிக் கொடுத்தோம். உலகையே அச்சுறுத்திய கொரோனாவை மிகச் சிறப்பாக அதிமுக அரசு கையாண்டது” என்று தெரிவித்தார்..

முன்னதாக தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் தமிழை கட்டாயபாடமாக்க மதுரை அதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழை அலுவல் மொழியாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மகளிர் உரிமை தொகையை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் தராமல் திமுக ஏமாற்றுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது..