
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு நேற்று காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தற்போது காலை உணவு திட்டம் தொடர்பாக ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 34,987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள். இந்த மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்த தமிழகத்தின் தாயுமானவர் முதல்வர் ஸ்டாலினை வணங்குகிறோம். இந்த திட்டம் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்திற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்திற்கு மு.க ஸ்டாலின் காலை உணவு திட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும். மேலும் இந்த திட்டம் கடல் தாண்டி உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று கூறியுள்ளார்.