
கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில், விற்பனை இலக்கை எட்டாத ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுமையான செயற்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோவில், சில வாலிபர்கள் கழுத்தில் பெல்ட் கட்டி, முட்டுக்காலில் நடக்க வைக்கப்பட்டு, நாயைப் போல இழுத்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக கொச்சி போலீசுக்கு தகவல் அளித்தனர்.
வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த வீடியோவில் காணப்படும் சம்பவம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் நடந்ததென்பது உறுதியாகியுள்ளது. வீடு வீடாக சென்று உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் இந்நிறுவனத்தில், ஊழியர்களுக்கு மாதந்தோறும் விற்பனை இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த இலக்கை எட்ட முடியாத ஊழியர்களிடம் மேலாளர்கள் இப்படியான மிருமாக்கியிருக்கும் கொடுமைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக போலீசில் யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும், ஊழியர்கள் மீது நிகழ்ந்த இத்தகைய செயல்கள் மிகுந்த கண்டனத்திற்குரியது. இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, வேலை இடங்களில் ஏற்படும் இத்தகைய கொடுமைகளை முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.