மும்பையில் ஒரு நபர் மதுகுடித்து விட்டு நடைபாதையில் பைக் ஓட்டி, அதை எதிர்த்தவருடன் தகராறு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பாஷ் பட்டேல் என்ற எக்ஸ் பயனர் தனது கட்டிடத்தின் ஜன்னல் வழியாக இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார். வீடியோவில், அந்த நபர் பாதுகாப்பு ஹெல்மெட் அணியாமல் நடைபாதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியதை காணலாம். அவரை தட்டி கேட்கும் முதியவரை அவர் கீழே தள்ளியதோடு, மோசமான வார்த்தைகளால் வசை பாடியதும் காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சி அளித்த விஷயம் என்னவெனில், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இதில் தலையிடாமல், சிலர் வேடிக்கை பார்த்து சிரித்தனர். வாகன ஓட்டும் விதிகளை மீறியதோடு, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்துக்கொண்ட அந்த நபர், தனது தவறை மறைக்க முயன்றார். முதியவர் தனது எதிர்ப்பை தொடர்ந்த போது, கோபமடைந்த நபர் அவரை மீண்டும் தாக்கியதாக வீடியோவில் தெரிகிறது.

இந்த சம்பவத்தை பதிவு செய்த பட்டேல், மும்பை போக்குவரத்து போலீசாருக்கு புகார் அளித்தார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மும்பை போலீசார் பதிலளித்து சம்பவ இடத்தைக் குறித்த விவரங்களை கேட்டனர். பின்னர், பட்டேலை அருகிலுள்ள காவல்நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்குமாறு கேட்டு கொண்டனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.