இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிவருகின்றன. லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து கடைசி நாளில் வெற்றிகரமாக கடந்தது. இதனால் தொடக்கத்தில் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இது, பர்மிங்காம் மைதானத்தில் இந்தியா வென்ற முதல் டெஸ்ட் போட்டியாகும். இதற்கு முன்பு இந்தியா இங்கு 8 டெஸ்டுகளில் ஆடி, 7 போட்டிகளில் தோல்வியும், ஒன்றில் டிராவும் சந்தித்தது.

“>

மேலும், இம்மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் 8 டெஸ்டில் விளையாடியும் வெற்றியை கண்டதில்லை (5 தோல்வி, 3 டிரா), இலங்கை இரு டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது. 58 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்தில் வெற்றியை சுவைத்த இந்தியா, தன் பக்கத்தில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது.