வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், திமுக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், உயர்க்கல்வித்துறை அமைச்சர், எம்எல்ஏ ஆகிய பதவியையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் இழக்கிறார். இதன் மூலம் தண்டனை காலம் 3 ஆண்டுகள், அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு என மொத்தமாக அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது.

பொன்முடி எம்எல்ஏவாக இருக்கும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி விரைவில் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அந்த சமயத்தில் இடைத்தேர்தலும் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன் பதவியில் இருந்த போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.