பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை கைப்பேசிகளுக்கு ஒரே நேரத்தில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்காக இன்று நடைபெறும் சோதனை முயற்சியின் போது பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பேரிடர்களின் போது அவசரகால தொடர்புகளை மேம்படுத்த பொது மக்களுக்கு உரிய தகவல்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கடுமையான வானிலை எச்சரிக்கை அறிவிப்புகள் மற்றும் வெள்ள நீர் வெளியேற்றுவது குறித்த தகவல்கள் அனைத்தையும் கைப்பேசி மூலமாக அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஒரு கைபேசி கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து கைப்பேசிகளுக்கும் இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடைய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களின் கைபேசிக்கு பேரிடர் குறித்து அவசர எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்படும். இதனால் பொதுமக்கள் அச்சமடையவோ அல்லது எதிர்வினை ஆற்றவோ வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.