பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல், தனது X கணக்கு ஹேக் செய்யப்பட்ட இரு மாதங்களுக்கு பிறகு மீட்டெடுத்துள்ளார். வீடியோவொன்றின் மூலம் தனது ரசிகர்களிடம் இந்த தகவலை பகிர்ந்த ஷ்ரேயா, தன்னுடைய கணக்கை மீட்டெடுக்க X ஆதரவு குழுவை தொடர்புகொள்ள கடுமையாக போராட வேண்டி இருந்தது என தெரிவித்துள்ளார். இந்திய குழுவில் ஒருவரின் உதவியால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது என அவர் நன்றியுடன் கூறினார். மேலும் X தளத்தில் தன்னைப்பற்றி போலியான தலைப்புகள் மற்றும் ஏ.ஐ உருவாக்கிய படங்களை கொண்ட தவறான விளம்பரங்கள் பரவுவதையும், அவை மோசடி இணையதளங்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறி ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதையும் வலியுறுத்தினார்.

 

இந்த பிரச்சனையை சந்தித்த ஒரே பிரபலமாக ஷ்ரேயா இல்லை என்றும், ஏராளமான பிரபலங்கள் இதே புகாரை முன்வைத்தும், X தளம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். “இந்த போலி விளம்பரங்களை அகற்ற எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது X-இன் விளம்பரக் கொள்கைகளுக்குள் வருகிறது. விரைவில் இதற்கான தீர்வு எடுக்கப்படும் என நம்புகிறேன்,” என அவர் கூறினார். ஷ்ரேயா தனது X கணக்கு ஹேக் செய்யப்பட்டதைக் குறித்து மார்ச் 1ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார். தற்போது மீண்டும் தனது கணக்குடன் இணையம் கொண்டாடும் ரசிகர்கள், அவரது மீட்பு குறித்து மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.