இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் போட்டியை நேரில் காண வேண்டும் என்ற தீரா ஆசை உள்ளது. ஆனால் குஜராத் வரை சென்று அகமதாபாத்தில் போட்டியை காண முடியாத சூழ்நிலை ஒருபுறம் இருக்க, குஜராத்தில் வசிக்கும் பல ரசிகர்களும் போட்டியை நேரில் காண முடியாத அளவிற்கு டிக்கெட் விலை சாமானியர்களுக்கு எட்டா இலக்காக உள்ளது. இந்நிலையில், நாட்டின் பல முக்கிய இடங்களில் நேரடி காட்சிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன..

அந்த வகையில் தமிழகத்தில் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை போன்ற பிரபலமான இடங்களை மையமாக வைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், இறுதிப் போட்டியை நேரடியாக பார்ப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் இருப்பதாக கோடான கோடி ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இது போன்ற இடங்களில் மக்களோடு மக்களாக கூச்சலிட்டு போட்டியை காண்பது கூடுதல் உற்சாகமாகவும், கிடைக்கப்பெறாத அரிய அனுபவத்தை கிரிக்கெட்-ன் தீவிர ரசிகர்களுக்கு கட்டாயம் அளிக்கும்.