சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் தாழ்தள பேருந்துகளை வாங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 65 சென்டிமீட்டர் உயரம் கொண்ட பஸ்களை உற்பத்தி செய்ய தற்போது ஒரே ஒரு நிறுவனம் மட்டும் தயாராக இருப்பதாகவும் அதை தயார் செய்வதற்கு 14 மாதங்கள் ஆகும் எனவும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

அதோடு சென்னை மற்றும் கோவை போன்ற மாநகரங்களில் 442 தாழ்தள பேருந்துகள் மற்றும் 100 மின்சார பேருந்துகள் இன்னும் 3 மாதங்களில் இயங்கும் என்றும் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சென்னை மாநகரில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும், எந்தெந்த சாலைகளில் இயக்க முடியாது என்பது தொடர்பான அறிக்கையை தமிழக  போக்குவரத்து துறை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.