சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இவர்களில் ஒருவரை எடுத்திருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

2023 உலக கோப்பை தொடரில் தொடர் வெற்றிகளுடன் வந்த இந்தியா இறுதிப் போட்டியில் திடீரென வீழ்ந்து அதிர்ச்சி கொடுத்தது. தொடக்கத்தில் தொடர் தோல்விகளுடன் (2 தோல்வி) போட்டியை தொடங்கிய ஆஸி., பின்னர் கம் பேக் கொடுத்து தொடர்ந்து 9 போட்டிகளில் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. 2011க்கு பிறகு மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வோம் என்று நினைத்து கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

தொடர் வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, திடீரென வீழ்ந்தது.. இது தற்போது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதில் ரசிகர்களின் கேள்வி என்னவென்றால் ரோகித் சர்மா தொடக்கத்தில் அடித்து ஆடிக்கொண்டிருக்கும் போது கில் தேவையில்லாத ஷாட் ஆடி அவுட் ஆன விதம். அதேபோல ரோஹித் சர்மா நன்றாக ஆடினாலும் கூட மேக்ஸ்வெல் ஓவரில் 10 ரன்கள் பவுண்டரியில் வந்த போது ஏன் தேவையில்லாமல் இறங்கி அந்த ஷாட் வேண்டும்? ஒருவேளை ரோஹித் சர்மா அவுட் ஆகாமல் பொறுமையாக கூடுதலாக 10 ஓவர் நின்று இருந்தால் கூட ஆட்டம் மாறி இருக்கலாம்.

ஆனால் ரோஹித் சர்மாவை குறை கூற முடியாது. அவர் இந்த உலகக் கோப்பையில் பயமில்லாமல் அதிரடியாகவே தனது ஓபனிங்கை  தொடங்கி வந்துள்ளார். மேலும் மிடில் ஆர்டரில் கே.எல். ராகுல் – கோலி ஜோடி சிறப்பாகவே ஆடியது. ஆனாலும் கூட ராகுல் மிகவும் பொறுமையாக பயந்து ஆடியது போல் இருந்ததாக ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர். விராட் கோலி பந்துக்கு பந்து ரன் சேர்த்த போது ராகுல் மிகவும் மெதுவாக ஆடியதாக ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும், அந்த நிலைமையில் அப்படித்தான் ஆட வேண்டும் என்றும் எனவும் சிலர் கூறுகின்றனர். ஒருவேளை ராகுல் கடைசி வரை நின்று இருந்தால் கூடுதலாக 40 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அதேசமயம் கடைசியில் ரசிகர்கள் நம்பிய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்தது ரசிகர்களின் கோபத்தை தூண்டியது. 

குறிப்பாக இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இறுதி அணி மீது விமர்சனம் வருகிறது. ஹர்திக் பாண்டியா காயமடைந்ததால் 5 பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே இந்தியா களம் இறங்கவுள்ளது. ஷமி விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பந்து வீச்சாளர்களின் ஆதரவு அவருக்கு இருந்தது. எனவே 5 பந்துவீச்சாளர்கள் என்ற ஃபார்முலாவுடன் இந்தியா சென்றது.

ஆனால் இறுதிப்போட்டியில் 5 பந்துவீச்சாளர் ஃபார்முலா தேவையில்லை என கருத்துகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக அஷ்வின் அல்லது ஷர்துல் தாக்குரில் ஒருவரை இறுதிப் போட்டியில் விளையாட வைத்திருக்க வேண்டும் என்ற வாதங்கள் எழுந்தன. ஆனால் வெற்றி பெற்ற அணியை இந்தியா மாற்றவில்லை. முந்தைய போட்டிகளில் விளையாடிய அதே அணிதான் களம் புகுந்தது.

 இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அணி சிக்கலில் இருந்தபோது பேட்டிங் செய்ய வந்து டெஸ்ட் பேட்டிங் ஆடினார். சூர்யகுமார் யாதவ் தனது இன்னிங்ஸில் கஷ்டப்பட்டு ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். 

டி20யில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் அடைந்தார். இவரால் இந்தியா பேட்டிங் கடைசியில் சரிவை சந்தித்தது. எனவே அவருக்குப் பதிலாக அஸ்வின் அல்லது ஷர்துல் தாக்கூர் விளையாடியிருந்தால், முடிவு கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் கருத்துக்கள் வருகின்றன.